Home » , » தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!

    தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!

    Written By Sadhikcdm on மார்ச் 24, 2013 | AM 7:22

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை புதிய வரிகள் ஏதுமின்றி தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. விலையில்லா அரிசித்திட்டம் தொடருவதோடு, பருப்பு வகைகள் மானிய விலையில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுவது தொடரும் என்பதும், விலைவாசியை கட்டுப்படுத்த கிலோ 20 ரூபாய் விலையில் அரிசி கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்கப்படும் என்பதும் வரவேற்கத்தகுந்த நடவடிக்கையாகும். 
    மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வறட்சி நிவாரணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று  நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதோடு, விவசாயத் தொழிலாளர்களுக்கும் வறட்சி நிவாரணம் அறிவித்திருக்க வேண்டும்.  விவசாய பரப்பளவு குறைந்து வரும் நிலையில் நிலப்பயன்பாட்டுக் கொள்கைகள் உருவாக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இது குறித்து சட்டம் கொண்டு வர வேண்டும். விவசாயத்தை குறிப்பாக உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியமாகும். ஏரிகளை பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்தது. எனினும் இந்தப் பணிகள் முறையாக நடைபெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 
    தூத்துக்குடியில் கப்பல்கட்டும் தளம் அமைக்கப்படும் என்பதும்,  மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்பதும், தென்மாவட்டங்களில் முதலீடுகள் வருவதை ஊக்குவிக்க திட்டம் அறிவிக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது. சிறு,குறு தொழில்களே வேலைவாய்ப்புகளை கூடுதலாக அளிக்கக்கூடியவை. இத்துறையில் கவனம் செலுத்தப்படுமென அரசு அறிவித்திருந்தாலும், குறிப்பான திட்டங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. எனவே, சிறு, குறு தொழில்களை  ஊக்குவிப்பதற்கு, பாதுகாப்பதற்கு உரிய ஒதுக்கீடும், திட்டமும் அறிவிக்கப்பட வேண்டும். 2013-14ம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கழிப்பறை வசதிகளும் உறுதி செய்யப்படும் என்பதும், அதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க அம்சம்.
    பொதுவாக,  அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இப்பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பான திட்டமிட்ட முயற்சிகள் தேவை. உள்ளாட்சிகளுக்கான நிதி மாநில அரசின் நிதி வருவாயில் 10 சதம் அளவிலேயே உள்ளது. இது 30 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
    மின்சாரம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு மின்பற்றாக்குறை எவ்வளவு? பற்றாக்குறையைப் போக்குவதற்கு என்ன ஏற்பாடு? என்பது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். பற்றாக்குறையை போக்கிட ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்வோருக்கு மானிய விலையில் டீசல் வழங்கி தற்காலிகமாக மின் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். 
    தமிழகத்தில் இவ்வாண்டில் 2 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேவையுடன் ஒப்பிடுகிற போது, இது மிகமிகக் குறைவாகும். வகை மாற்றம் செய்து கூடுதலாக மனைப்பட்டா வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் செலவிடப்படவில்லை. இந்நிதி உட்கூறுத் திட்டத்திற்கு மட்டுமே செலவிடப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 
    மேலும் ஒவ்வொரு திட்டத்திலும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்படுவதும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் வசமுள்ள சாலைகளின் ஒரு பகுதியை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் கொடுக்கப்பட்டிருப்பதும், இது விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருப்பதும் சரியான அணுகுமுறையல்ல.
    தமிழ் மொழியில் பிற மொழி இலக்கியங்களும், அறிவுத்துறை படைப்புகளும், ஆவணங்களும் பெறுவதற்கு உரியமுறையில் மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க உரிய திட்டமும், நிதிஒதுக்கீடும் அவசியமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .