Home » , , , » ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்: ஏப்ரல் துயரம்

    ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்: ஏப்ரல் துயரம்

    Written By Sadhikcdm on ஏப்ரல் 11, 2013 | 5:12 AM


    ஏப்ரல் பல்வேறு எண்ணங்களை எதிரொலிக்கும் திங்களாகும். முதல் நாள் முட்டாள்களுக்கு உரியது என்பது இளைஞர்களின் விளையாட்டு.  பஞ்சாங்கத்தில் மூழ்கியோர் 14ஆம் நாளைத் தமிழர் புத்தாண்டு என்றுரைப்பர். ஆனால் பகுத்தறிவாளர்களோ உலக மாக்கவி ஷேக்ஸ்பியரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் ஈன்ற திங்கள் என்று போற்றுவர். இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலை வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் என்ற மானுடப் படுகொலையும், சோக நிகழ்வையும் இணைத்துக் கொண்டது ஏப்ரல் திங்கள். 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை பல நினைவலை களை நம் நெஞ்சின் முன் நிறுத்துகிறது. இந்நிகழ்விற்கு முன்பும் பின்பும் நடந்த பல வரலாற்று படிப்பினைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது.


    சாலைகளில் புழுதிபறக்க நடந்துவந்த 150 ராணுவத்தினர் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள், மொத்தம் 1650 முறை அதாவது ஒரு சிப்பாய்க்கு 33 குண்டுகள் என்ற முறையில் 5850 குண்டுகளைச் சீறிப்பாயச் செய்தனர். துடிக்கத் துடிக்க மக்கள் வீழுந்துக்கொண்டே இருந்தார்கள். குழந்தைகள், முதியவரக்ள், பெண்கள் யாரும் தப்பமுடியவில்லை. என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ஒற்றை வாயிலை மட்டும் கொண்ட அந்த மைதானத்தின் மண்ணில் இப்போது நீங்கள் நடந்தாலும் அந்த சோகத்தின் தடத்தை உணரமுடியும். 93 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் அந்த மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் தோட்டாக்கள் பதிந்த வடுக்கள் ஆறாத ரணமாய் உள்ளது. மைதானத்தின் இடது ஓரத்திற்கு முன்பு 120 மனித சடலங்களை உள்வாங்கிய அந்த பாழும் கிணறு மௌனசாட்சியாய்  நிற்கிறது. 

    அந்த மைதானத்தின் பெயர்: ஜாலியன் வாலாபாக். இருக்குமிடம்: பஞ்சாப்பின் அமிர்தசரஸ். நடந்த ஆண்டு: 13 ஏப்ரல் 1919. இறந்தவர்கள் எண்ணிக்கை: 1526. காரணம்: அந்நியனுக்கு அடிபணிய மாட்டோம் என்றது. சுட்டது: ஏகாதிபத்திய திமிர். திமிரின் பெயர்: ரெஜினால்ட் டையர்.

    "நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன்படி அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் குண்டடிப்பட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடியிருந்தவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமையாக நடந்துக் கொன்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை".

    1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது திமிர் பிடித்த கருத்தக்கள் இவை.

    பின்னணியின் பின்னணி.. 

    திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம் மற்றும் அப்போதுதான் இந்தியாவில் போராட்ட களத்தில் இறங்கியிருந்த மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் போன்றவை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பற்றத்துவங்கின. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. அந்நிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட எழுச்சியை ஆரம்பத்திலேயே துடைத்தெறிய ஆட்சியாளர் முடிவெடுத்தனர். இந்த பின்னணியில்தான் சிட்னி ரௌலட் என்பவர் தலை மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை எதிர்த்துதான் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்தது அப்போதுதான் அந்த கொடூர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதுமட்டுமே பின்னணியாக சொல்லப்படுகிறது. இது மட்டுமா பின்னணி.

    இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றியே இந்த சிட்னி ரௌலட் குழு அதிகம் ஆராய்ந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஆஹா என்று எழுந்த யுகபுரட்சி இந்தியாவையும் ஆட்டிப்படைத்தது. இங்கிருந்த இளஞர்கள் அந்த நாட்டை நோக்கி நடைப்போட துவங்கினர். எனவேதான் போல்ஷெவிக் தொடர்புகள் ஆராய்ச்சி துவங்கியது. இந்த காலகட்டத்தில்தான் வங்கத்தில் இருந்த புரட்சிக்குழுக்கள் பக்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர் உரைகளை முன்னோடியாகக் கொண்டனர். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுத்திலிருந்து பெறப்பட்ட வார்த்தையான அனுசீலன் சமிதி என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டது. இதில் அரவிந்த் கோஷ், பரித்திர கோஷ், சி.ஆர்.தாஸ், ஜதீன் பானர்ஜி ஆகியோர் அங்கம் வகித்தனர். 

    1905 இல் நடந்த வங்கப்பிரிவினை இந்த புரட்சியாளர்களை மிகவும் சினம்கொள்ளச் செய்தது. 1907 டிசம்பர் 23 இல் குதிராம் போசும், பிரபுல்ல சகியும் வங்கப்பிரிவினைக்கு காரணமான கிங்ஸ் போர்டு என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு  குண்டு வைத்தனர். 1908 இல் சசீந்திரநாத் சன்யால் பனாரசில் இளைஞர்களை திரட்டும் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றினார். ஹர்தயால் 1913 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கதார் என்ற பத்திரிகையை துவக்கினார். பின்பு இந்த பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு கத்தார் சிங் சராபா என்ற இளம் புரட்சியாளனை கொடுத்தது. இந்த அமைப்பு முன்பு இருந்த அமைப்புகளை எல்லாம் விட மதசார்பற்ற தன்மையை வலியுறுத்தியது. 1915 ஆம் ஆண்டு கத்தார் சிங் சராபா தன்னுடைய 20 ஆம் வயதில் தூக்கு மேடையேறினான். 

    மேற்கொண்ட குழுக்கள் எல்லாம் தங்களுடைய ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசியல் வகுப்பை நடத்தினர். குறிப்பாக கல்கத்தா அனுசீலன் சமிதி அலுவலக நூலகத்தில் 4000 புத்தகங்கள் இருந்தது. இந்த நூல்கள் தேசபக்த உணர்வையும், தியாக உணர்வையும், அடிமைத்தனத்தின் மீது வெறுப்பையும் தூண்டின. முந்தைய புரட்சிகள் மற்றும் விடுதலை போராட்டங்கள் மற்றும் படிப்பினைகளை போதித்தன. இறுதியாய் பிரிட்டிஷ் இந்தியாவை ஆக்ரமித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவு மற்றும் துன்பத்தை விளக்கின.

    இந்த பின்னணியில்தான் இயக்கங்களை, ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு ரவுளட் சட்டம் வழிவகுத்தது கொடுத்தது. இருப்பினும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நாடு முழுவதும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். இது ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் வன்முறை சம்பவங்களுடன் கடையடைப்பு நடந்தது. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர். மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. தொடர்ந்து ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள் நடந்தது. ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ந்தது. இந்த போராட்டத்தின் உச்சம்தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.

    ஏப்ரல் 13, 1919..    

    ஆஸ்த்திரியா விடுதலை பெற்ற, கம்யூனிஸ்டுகளின் மூன்றாம் அகிலம் துவக்கப்பட்ட, மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமலாக்கப்பட்ட, கிலாபத் இயக்கம் துவங்கிய அதே 1919 ஆம் ஆண்டிண் ஏப்ரல் 13 வைசாகி நாள். அந்த தினம்தான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு நடந்த நாள். அமிர்தசரஸில் இந்நாள் எப்போதும் சிறப்புடன் கொண்டாடப்படும். அந்த தினத்தில்தான் ரவுலட்சட்டத்தை எதிர்த்து அந்நகரின் புகழ்பெற்ற ஜாலியன் வாலாபாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். திரண்டவர்கள் மீதுதான் மனிதத்தனமையற்ற துப்பாக்கிச்சூட்டை டயர் நடத்தினான். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. திறந்திருந்த ஒரேயரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களி மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழுந்தனர். மொத்தமாய் வீழ்ந்தனர். 

    பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டயரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" ஆட்சியாளர்களுகு தந்தி அனுப்பினான். இதனால்தான், ஆட்சியாளர்களின் இந்த கொழுப்பால்தான் பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்த போது "சுட்டேன் சுட்டேன் கை ஓயும் வரைச் சுட்டேன்" என திமிருடன் டயர் வாக்கு மூலம் கொடுத்தான். மைதானங்களில் மக்கள் விளையாடுவது இயல்பெனினும் மைதானங்கள் விளையாடுவதற்கு மட்டுமல மக்கள் வாழ்வினை பாதுகாக்கவும் பயன்படுத்த முடியுமென மக்கள் நிருபித்ததும் இங்குதான். அவர்கள் அப்போது மாண்டு போனாலும் அவர்களின் இறுதி நிகழ்வு தேசத்தில் ஆயிரக்கணக்கான கோபங்களின் பிறப்பிடமாய் இருந்தது. அந்த மைதானத்தின் மண் இந்த தேசத்தில் பல நூறு உத்தம் சிங்குகளை, பகத் சிங்குகளை உருவாக்கியது. இந்த மைதானத்தின் உதிரம் தோய்த மண்ணை இறுதிவரை தன்னுடன் அடைகாத்தான் பகத்சிங். இந்த படுகொலைகளை ஆதரித்த பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையரை 21 ஆண்டுகள் கழித்து லண்டனில் சுட்டுக்கொன்றான் உத்தம்சிங். அந்நிய ஆட்சியாளர்கள் மக்களை மந்தைகளா நினைத்தனர். மக்கள் மந்தைகள் இல்லை என நிருபித்தனர். அதனால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. 

    ஆட்சியில் மட்டும்தான் மாற்றம்.. 

    இப்போதும் இந்த தேசத்தின் சுதேசி ஆட்சியாளர்களின் மனநிலையில் பெரிய மாறுதல்கள் எதுவும் வரவில்லை 2012 - 2013 ஆண்டடுக்கான வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி, நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்குவதில் கொள்கை வகுப்பவர்கள், அரசியல்வாதிகள், விவசாயத்துறையைச் சேர்ந்தவர்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டோரின் பங்கை பாராட்டியிருக்கிறார். இந்திய நாட்டின் பொருளா தாரத்தின் அச்சாணியாய் இருக்கும், தங்கள் உழைப்பால் தேச வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை செய்து வரும் தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றியோ, விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றியோ தப்பித்தவறியும் அவர் ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

    இந்த பட்ஜெட்டிலும் வழக்கம் போலவே பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் மீது மேலும் மேலும் வரிச்சுமைகள் ஏற்றபடுள்ளது. பணக்காரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீதான நேர்முக வரிகளில் ரூ. 4 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் மக்களிடமிருந்து வசூலிக்கும் மறைமுக வரிகள் ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர உயர மக்கள் துன்பத்தின் உச்சத்தை நோக்கி செல்கின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றியோ, விலை நிலங்கள் வேகமாய் குறைவது குறித்தோ, வேலையிலா பட்டாளம் வீதியில் அலைவது குறித்தோ, இதன் தொடர் விளைவாய் சமூக குற்றங்கள் அதிகரிப்பது குறித்தோ, இதனால் ஏற்படும் வாழ்க்கை நெருக்கடி குறித்தோ கொஞ்சமும் கவலையில்லாமல் ஆள்பவர்கள் வாழ்கிறார்கள்.

    இந்திய பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நமது தேசத்தையே மைதானங்களாக மாற்றி நம் வாழ்வோடு விளையாடும் போது நாம் என்ன செய்யப்போகிறோம்? கொடுந்துயரம் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் இந்தியாவில் நிறைய மைதானங்கள் இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது மக்கள் இயக்கங்களின் கடமையாய் இருக்கிறது. விளையாடுவதற்கும், விளையாட்டை ரசிக்கவும் மட்டுமல்ல மைதானங்கள். நமது ஆட்சியாளர்கள் மக்களை மந்தைகளா நினைக்கின்றனர். மக்கள் மந்தைகள் இல்லை என நிருபிக்க வேண்டியிருக்கிறது. எனவே..! 

    ----------------ஏப்ரல் 2012 மகளிர் சிந்தனை இதழில் வெளியானது-----------------------
     
     
     நன்றி:s.g.ரமேஷ் பாபு
     http://natputanramesh.blogspot.in
     
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .