Home » , , , » கேலிச்சித்திரம் அல்ல... கேலிக்கூத்து... தனி ஈழம் தீர்வல்ல

    கேலிச்சித்திரம் அல்ல... கேலிக்கூத்து... தனி ஈழம் தீர்வல்ல

    Written By Sadhikcdm on ஏப்ரல் 09, 2013 | 9:43 PM

    குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டில்(7-4-2013) ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்காததால் ராஜபக்சேவுடன் தோழர்கள் பிரகாஷ் காரத்தும், ஜி.ராம கிருஷ்ணனும் சேர்ந்து நிற்பது போல இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தனி ஈழம் தீர்வல்ல, அந்த மக்களின் இப்போதைய உடனடித் தேவை மறுவாழ்வு, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று வலியுறுத்துபவர்கள் அனைவருமே ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என்று கூறுவது கேலிச் சித்திரம் அல்ல, கேலிக்கூத்து என்றே கூற வேண்டும். இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்பின் முரணின்றி தனது கருத்தை முன்வைத்து வருகிறது. 1983ம் ஆண்டில் இருந்தே இலங்கை இனப்பிரச்சனைக்கு ஆயுதமோதல் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். தமிழும் தமிழரும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு ராஜீய ரீதியில் இந்திய அரசாங்கம் தலையிட்டு உதவவேண்டும்.
    இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கை சுதந்திரம் அடைந்த கடந்த 60 ஆண்டுகளில் பண்டார நாயகா, சிரிமாவோ பண்டாரநாயகா, ஜெய வர்த்தனே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, தற்போது ராஜபக்சே என இலங்கையின் ஆட்சியாளர்கள் மாறி வந்த போதும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண்பதில் போதுமான அக்கறை செலுத்தப்படவில்லை. இதை அவ்வப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்ற கருத்தை முன்வைத் ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவதூறு செய்தவர்கள் அப்போதும் உண்டு, இப்போதும் உண்டு. தீவிரமான இனவெறி கிளப்பிவிடப்பட்ட தருணத்திலும் கூட கட்சி தனது கருத்தை தைரியமாக முன்வைத்து வந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கருத்துக்கூற யாருக்கும் உரிமை உண்டு. இந்திய அரசு பின்பற்றும் அயல்துறை கொள்கையில் தனக்குள்ள மாறுபட்ட கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி அவ்வப்போது தெரிவித்துள்ளது. உதாரணமாக, பண்டிதநேரு பிரதமராக இருந்த நேரத்தில் கூட்டுச்சேரா அயல்துறை கொள்கையில் அவரது அரசுக்கு இருந்த ஊசலாட்டத்தை சுட்டிக்காட்டி யுள்ளோம்.அமெரிக்காவின் உதவியுடன் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து புரிந்து வரும் அட்டூழியத்தை கட்சி கண்டித்து வந்துள்ளதோடு, இஸ்ரேலுடன் பாதுகாப் புத்துறை தொடர்புடைய ஒப்பந்தங்களை இந்திய அரசு செய்து கொள்ளக்கூடாது என்றும், அந்நாட்டின் இனவெறி கொள்கைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் கட்சி கூறிவந்துள்ளது. இப்போதும் போராடும் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஒருமைப்பாட்டை கட்சி தெரிவிக்கிறது. இந்திய அரசு எடுத்த அமெரிக்கா சார்பு அயல்துறை கொள்கையை கட்சி தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது.
    குறிப்பாக அமெரிக்க அரசுடன் மன் மோகன்சிங் அரசு செய்துகொண்ட 123 ஒப்பந்தம் இந்தியாவில் தொடர் விபரீதங்களை உருவாக்கும் என்று கட்சி எச்சரித்தது. அந்த உடன்பாட்டின் தொடர்ச்சியாகவே தற்போது சில்லரை வர்த்தகம், காப்பீடு, வங்கி என அனைத்து துறைகளிலும் தங்குதடையற்ற அந்நிய முதலீட்டுக்கு கதவு திறந்துவிடப்படுகிறது. ஒரு அரசு எடுக்கும் அயல்துறை கொள்கை உள்நாட்டு கொள்கையையும் பாதிக்கும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ள முயன்றபோது, மார்க்சிஸ்ட் கட்சி அதை எதிர்த்தது. ஆனால் இந்தியாவுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காகவே இந்த உடன்பாட்டில் கையெழுத்திட முயல்வதாக மன்மோகன் சிங் அரசு மாய்மாலத்தில் ஈடுபட்டது. இதை நம்பிய சிலர் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்தனர். ஆனால் இன்றைக்கு உண்மை நிலை என்னவென்று தெளிவாகியுள்ளது.
    இடதுசாரிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்ததைத் தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. அந்த உடன்பாட்டின் தொடர்ச்சியாக இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்பையும் சுயாதிபத்தியத்தையும் தகர்க்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளில் மன்மோகன் சிங் அரசு ஈடுபட்டு வருகிறது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப் பட்டால்தான் இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என்ற கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்தனர். ஆனால் மொழிவாரி மாநிலங்கள் சிதைக்கப்பட்டு பலவீனமான மாநிலங்கள், அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள மத்திய அரசு என்பதே இந்துத்வா சக்திகளின் நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இதில் ஒரு ஊசலாட்டமான அவ்வப்போது கிடைக்கும் குறுகிய அரசியல் லாபங்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் கட்சியாக அக்கட்சி உள்ளது. ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் வலியுறுத்துகின்றன. பாஜக இதை ஆதரிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இந்த கோஷத்தை ஆதரிக்கிறது. மிகவும் பின்தங்கியுள்ள தெலுங்கானா பகுதியின் முன்னேற்றத்திற்கு விசேஷ பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று கட்சி கோருகிறது. அதே நேரத்தில் தனித்தெலுங்கானா என்ற அரசியல் கோஷம் அப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படாது என்றும் கட்சி கருதுகிறது. மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனும் இதே கருத்தைத்தான் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை தாவா ஏற்பட்ட போது அண்டை நாடுகளான இரு நாடுகளும் இந்தப் பிரச்சனையை பேசித்தீர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. இந்த நியாயமான கருத்தை கூறியதற்காக சீன ஏஜெண்டுகள், தேசவிரோதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களும், தொண்டர் ளும் அவதூறு செய்யப்பட்டார்கள். தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியதுதான் உண்மை என்பதை காலம் நிரூபித்துள்ளது.
    ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில் அயல்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இருநாடுகளும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஏகாதிபத்திய அச்சுறுத்தலை இந்த பிராந்தியத்தில் சமாளிக்க முடியும் என்பது காலம் உணர்த்தும் பாடமாக உள்ளது. காங்கிரஸ், பாஜக உட்பட பல கட்சிகள் மத்தியில் ஒன்று பேசுவது, மாநி லத்தில் ஒன்று பேசுவது, மாநிலத்திற்கு மாநிலம் தனது கருத்தை மாற்றிக் கொள்வது என்ற நிலைபாட்டையே கொண்டுள்ளன. உதாரணமாக, காவிரிப் பிரச்சனையில் இங்குள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கூறும். ஆனால் கர்நாடகத்தில் இதே கட்சிகள், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக் கூடாது என்று வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும். ஆனால் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை மறுக்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கர்நாடகக் குழுவும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்பது ஒரு சிலரின் கருத்து. அந்தக் கருத்தை முன் வைக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் இந்த கோஷம் கடந்த காலத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்யவில்லை, தற்போது போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்த கோஷம் பயனளிக்காது என்று கூற மார்க்சிஸ்ட் கட்சிக்கு உரிமை உண்டு. தனி ஈழமே தீர்வு என்று கூறும் கட்சிகளும் ஒரே நிலைபாட்டில் இல்லை. அதிமுக, திமுக, மதிமுக மற்றும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் ஒரே குரலில் பேசுவதில்லை. ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார் என்று திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகின்றன. போரினால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு உடனடியாக தேவைப்படுவது அவர்கள் முழுமையாக மீள்குடி அமர்த்தப்படுவது, நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நம்பகத்தன்மையுள்ள சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது. இக்கருத்தை முன்வைப்பதால் ராஜபக்சேவை ஆதரிப்பதாக கூறுவது அடிப்படை நாகரிகமற்றது. அவதூறை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
    இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த மாணவர்களின் போராட்ட உணர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்துகொள்கிறது. ஆனால் இதே மாணவர்கள் நாளை தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் இன்றைக்கு மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளில் எத்தனைக் கட்சிகள், ஊடகங்கள் அதை ஆதரிக்கும் என்பது கேள்விக்குறியே.
    தமிழுக்காக, தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் பின்தங்கியதில்லை. தமிழக மக்கள் உள்ளிட்ட இந்திய மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சி யாக போராடிவரும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, ஊழல் போன்ற பிரச்சனைகளுக்காக இடையறாது போராடி வருகிறது. ஆனால் இந்திய மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்களுக்கு காரணமான கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டிய மக்களை குறுகிய இனத்திருகல் அடிப்படையில் திசை திருப்பும் சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து வைத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69சதவீத இடஒதுக்கீடு, ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு போன்றவற்றுக்காக கட்சி போராடும்போது பல கட்சிகள் களத்திலேயே இல்லை. குறிப்பாக உத் தப்புரம், தருமபுரி கொடுமை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக கட்சி போராடும்போது பல கட்சிகள் யார் பக்கம் நின்றன என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் நன்கறிவார்கள்.

    “செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

    எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து”

    என்பது வள்ளுவர் வாய்மொழி.


                
                   நன்றி :
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .