கன்னியாகுமரி
மாவட்டம், தக்கலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி
ஊழியர்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். 5.4.2013 அன்று
மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தக்கலை ஒன்றிய செயலாளர்
சைமன் சைலஸ், முன்னணி ஊழியர்கள் அரங்கசாமி, அனில்குமார் ஆகியோர் தக்கலை
கட்சி அலுவலகத்தில் இருந்தனர். அப்போது சிலரைத் தேடிவந்த காவல்துறையினர்
தக்கலை கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த தோழர்கள் சைமன் சைலஸ்,
அரங்கசாமி, அனில்குமார் ஆகியோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் இவர்கள்
மூவரும் படுகாயமடைந்தனர். இவ்வாறு இவர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல்
மூவரையும் கைது செய்தனர். படுகாயம் அடைந்த மூவரையும் மருத்துவமனைக்கு கூட
அனுப்பி வைக்க மறுத்தனர். இந்நிலையில் தோழர்கள் முருகேசன் (மாவட்டச்
செயலாளர்), ஏ.வி. பெல்லார்மின் (முன்னாள் எம்.பி.), ஆர். லீமாறோஸ்
(முன்னாள் எம்.எல்.ஏ.,) உட்பட காவல்துறை தாக்குதலில் காயமடைந்த தோழர்களைக்
காண காவல்நிலையம் வந்தனர். காவல்துறையோ மீண்டும் அத்துமீறி இம்மூன்று
தலைவர்கள் உட்பட 109 பேர் மீது பொய்வழக்கை பதிவு செய்துள்ளனர்.
தக்கலை நீதிபதி முன்பு கைது செய்யப்பட்டு காயமடைந்த மூவரும்
ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்த நீதிபதி
மூவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார். இருப்பினும்
மருத்துவமனையில் அனுமதிக்காமல் பாளையங்கோட்டை சிறைச் சாலைக்கு அழைத்து
சென்றனர். பாளையங்கோட்டை சிறை அதிகாரி அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களையும்,
நீதிபதி உத்தரவையும் பார்த்து விட்டு அவர்களை அந்த நிலையில் சிறையில்
அடைக்க முடியாது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் கூறியுள்ளார்.
இதன் பிறகே இவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி
ஊழியர்கள் மீது இவ்வாறு மிருகத்தனமான தாக்குதல் நடத்தி, கைது செய்த
காவல்துறையினரின் நடவடிக்கையை கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு
வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய
காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், கைது
செய்யப்பட்டுள்ள மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும், சிபிஎம்
ஊழியர்கள்மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் உனடியாக வாபஸ்
பெறுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு
வலியுறுத்துகிறது.- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக