உண்மையை, உலகம் உணரும் பொருட்டு மேற்கொண்ட போராட்டங்கள்.
இறுதியில் கிடைத்த வெற்றியின் ஆவணம் இந்தப் படம்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை அடிவாரத்தில்...
அமைந்த கிராமம் வாச்சாத்தி.
அழகான, பாடலுடன் ஆரம்பமாகும் பாடல்,
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு இருந்த கிராமத்தின் மகிழ்ச்சியை நம் மீதும் தெளிக்கிறது.
"மூச்சு காத்து பொறந்த மண்ணில் பொறந்தவங்க நாங்க
மூடிப் போட்டு மனசை பூட்ட மறந்தவங்க தாங்க
வயித்தை தாண்டி கொஞ்சம் கூட சேர்த்தது இல்லீங்க
வனத்தை தாண்டி நாங்க வணங்க சாமி இல்லீங்க...."
இரா. பிரபாகர் இசையில்... கவிஞர் தனி கொடியின் வரிகளில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
1992, ஜூன் , 20 ஆம் தேதி சம்பவம் நிகழ்ந்தது, ஆனால்,
1992 ஜூலை 7ஆம் தேதி தான் மலை வாழ் மக்கள் இயக்கத்திடம், தெரியப்படுத்த கூடிய சூழல் ஊர் மக்களுக்கு.
ஒரு வேளை, இந்த மலை வாழ் மக்கள் சங்கத்தின் காதுகளுக்கு இந்த சம்பவம் பற்றி தெரிய வராமல் போய் இருந்தால்....
காணாமலே போய் இருக்குமோ இந்த கிராமம், என்ற பதைபதைப்பு எழுகிறது.
எந்த ஒரு கட்சியை சார்ந்தவராகவோ, சாரதவராகவோ இருந்தாலும், படத்தைப் பார்த்து முடித்து உடனே கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மலை வாழ் மக்கள் சங்கத்திற்கும் கை குவித்து வணக்கம் சொல்ல வைக்கும். இது போன்று, மக்கள் பிரச்சனைகளுக்காக, லாபத்தை கணக்கு பார்க்காமல் ஒரு கட்சி நம்மிடையே இருப்பது ஆறுதலாக இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பு நடந்ததை, விவரிக்கும் பொழுதே கண்ணீர் கொட்டி கொண்டே, பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுவது, இன்னும் அவர்களின் காயம் உலராமல் இருப்பதையே காட்டுகிறது.
ஒரு பெண், இவர்கள் செய்த கொடுமைகளை வரிசையாக சொல்லும் பொழுது, அங்கே வரும் ஒரு பாட்டில், "காவ காக்கும், கடவுளுக்கும் கண் அவிஞ்சு போச்சா ".... என்ற வரிகளில் உள்ள கோபம், அவர்களின் தாள முடியாத வேதனையை நம்மையும் உணர செய்வதாக உள்ளது.
அங்கு பணிபுரிந்த வனத்துறையினர், வீரப்பனை பிடிப்பதற்காக சென்ற காவல் துறையினரின் கோர தாண்டவத்திற்கு பின், எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிகிறது இருபது வருடங்களுக்கு பின்னால் இருந்த கிராமத்தின் நிலை...
அந்த காலத்தில், மன்னர்கள் படை எடுத்து சென்று வெற்றி பெற்ற பின், இது மாதிரியாக தான், வெற்றி கொள்ளப்பட்ட இடங்கள் இருந்திருக்குமோ என்று எண்ணும் பொழுதே, போங்கடா, நீங்களும், உங்க வெற்றியும் என்று வசைபாட தோன்றுகிறது.
ஒரு வீடு கூட உருப்படியாக இல்லாத படிக்கு, சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கப்பட்டிருந்த ஓட்டு வீடுகள், உடைத்து நொறுக்கப்பட்டிருந்த பாத்திர பண்டங்கள், பணம், ஆடு, மாடு, கோழிகளை கூட விட்டு வைக்காமல், அனைத்தையுமே திருடி சென்றதோடு, அங்கு இருந்த மக்களை அடித்து உதைத்து, மிரட்டி, கொடுமைப்படுத்தி, பதினெட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அங்கு இருந்த கிணற்றில், எண்ணையை ஊற்றி , குடிக்க கூட நீரில்லாமல், ஒரு சுடுகாட்டைப் போல காட்சி அளித்தது அந்த படங்களில் அன்றைய வாச்சாத்தி. வரிசையாக இது போன்ற கொடுமைகளை அடுக்கிகொண்டே போகும் பொழுது, முள்ளி வாய்க்கால் நினைவுக்கு வந்து ஒரு புறம் மனதை முள்ளாக குத்துகிறது.
ஒரு பக்கம் மட்டும், எடுக்காமல், இன்னொரு புறமும், குற்றவாளிகளையும் பேச வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எந்த அரசு வந்தாலும், இதில் மட்டும், ஒற்றுமையாக...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டதற்கான, ஒரே காரணம், இருவருக்குமே இதில் பங்கு உண்டு, மேலும், உள்துறை என்பது முதல்வர் பதில் அளிக்க வேண்டிய ஒன்று என்பதாலும், இந்த தப்பித்தல் நடவடிக்கை இருந்திருக்கும். எப்பொழுதும் போலவே பெருமையாக நடந்த விஷயம் என்றால், தன் சாமர்த்தியம் என்றும், இழிவை தேடி தருவதாக இருந்தால், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதோடு, அப்படி ஒன்றே நடக்கவில்லை என்பதையும் காட்டிக் கொள்வதாகவே தற்கால முதல்வர்களின் செயல்பாடு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சரியான, நேரத்தில், இந்த கொடுமைகள், சரியான இயக்கத்திடமும், கொண்டு செல்லப்பட்டு, காலம் தாழ்த்தி என்றாலும், நியாயத்திற்கு கிடைத்த வெற்றியை காட்டுகிறது இப்படம்.
இந்த ஆவணப்படம்,
அவலமான சம்பவம், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், மலை வாழ் மக்கள் இயக்கத்திடம் தங்கள் குறைகளை கொட்டி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், இவ்வளவு பேரும் மக்களுடன் இணைந்து போராடியதால் தான்,
அங்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டி கொள்ளாத மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியாளர்களை, ஆட்டுவித்த அரசை எதிர்த்து பெறப்பட்ட வெற்றியானது அசாதாரண வெற்றி என்பதை விளக்குகிறது.
இருபது வருடங்களில், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும்,
அது சென்ற விதம், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு,
ஒவ்வொரு தடையையும் தாண்டி சென்றது,
இதற்காக, இதனை முன்னெடுத்து நடத்திய, மலை வாழ் மக்கள் இயக்க தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் டில்லி பாபு, வழக்கறிஞர் சம்கி ராஜா, இன்னும், பல பேர், இந்த வழக்கு எந்த அளவு தங்களை பாதித்தது என்றும், வழியில் தாங்கள் சந்தித்த பல இன்னல்களையும், வழக்கின் போக்கினையும், அடையாள அணி வகுப்பு என்று 1500 பேர்களை நிறுத்தி குழப்பியதையும், உச்ச நீதி மன்றமே, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விசாரணைக்கு உட்படுத்த சொல்லியும், மாறி மாறி ஆண்டு வரும் எந்த ஒரு அரசும் இதற்கு தயாராக இல்லாத நிலையையும், படம் நெடுக விவரித்துக் கொண்டே செல்கின்றனர்.
இந்த ஆவணப்படத்தில் ஒருவர் கூறியது போல,
படிப்பிற்கும், மன உறுதிக்கும் சம்பந்தம் இல்லை, என்பதற்கு சரியான உதாரணம்,
பணத்தாசை காட்டியும், மிரட்டியும் பணிய வைக்க முடியாத வாச்சாத்தி மக்கள், கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்.
காற்று, நதி, பறவை காடுகள், தாவரம், இவற்றை உங்கள் குழந்தையின் குழந்தைகள் காண வேண்டும் என்றால் காடுகளை மலை வாழ் மக்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள், பாதுகாப்பார்கள் என்று ஒருவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து நம் அரசு, மலை வாழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து காடு என்று செல்வத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
அநீதியுடன், சமரசம் செய்ய வேண்டியதில்லை, போராடுவதற்கான, எல்லா நியாயங்களும், இங்கே இருக்கிறது என்று கூறிய பிருந்தா காரத்தின், சொற்கள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
தீர்ப்பிற்கு பின் ஆவணப்படத்தின் இறுதியில் வருகிற பாடல் வரிகளில்,
பிறக்கும் பொழுது தாய் மடி
"வளரும் பொழுது ஊர்மடி
தாயும் ஊரும் தள்ளும் பொழுது தாங்கும் இந்த செங்கொடி... "
என்ற மூன்றே வரிகளில் இந்த வெற்றிக்கு உதவியவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறது வாச்சாத்தி.
ஆவணப்படமானது, எதையும் மிச்சம் வைக்காமல், அனைத்து கோணங்களிலும் பார்க்கப்பட்ட தொகுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக கண் முன்னே இருக்கிறது, பாரதி கிருஷ்ணகுமாரின், உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி.
நன்றி ;தீபா நாகராணி
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக