கட்டுரையாளர் ச.தமிழ்ச்செல்வன்
தொடர்புடைய பதிவுகள் :
காலம் போன காலத்திலேயாவது இளைஞர்களைப்பற்றின கவலை கலைஞருக்கு வந்து அதற்காக ஒரு படமும் எடுத்திட்டாரே என்று நம்ம்ம்பி சொந்தக் காசில் டிக்கட் வாங்கி இளைஞன் படத்துக்குப் போய் - எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க இவிங்க ரொம்ப நல்லவிங்க என்று சொல்லிச் சொல்லி உள்ளே வைத்து அவர்கள் கொடுத்ததையெல்லாம் வாங்கிக்கொண்டு கடைசி வரை இருக்க முடியாமல் வெளியே அலறி அடித்து ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்.அந்த சோகக்கதையைச் சொல்லி வாறேன் கொஞ்சம் கேளுங்க..
கலைஞரின் 75ஆவது படம் என்பதால் கலைஞரின் குடும்பத்துக்கு ரொம்ப வேண்டப்பட்ட லாட்டரி கிங் மார்ட்டின் கோடி கோடியாகக் கொட்டி மலேசியா சிங்கப்பூர் வெனிஸ் ஐரோப்பா எல்லாம் சென்று எடுத்த படம்.ஏதோ ஒரு கோட்டைக்குள்ளே கொத்தடிமைகளாக மாட்டிக்கொண்ட மக்களை விடுவிக்க ஒரு இளைஞன் போராடுவதுதான் கதை என்று உள்ளே போகும்போது சொன்னார்கள். ஆகா .. கலைஞர் தமிழகத்துத் தொழிற்சாலைகளில் சுமங்கலித்திட்டம் என்ற பேரில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் இளம் பெண்கள் பற்றிக் கதை எழுதிவிட்டாரே என்று ஒரு நிமிடம் நம்ம்பிட்டேன். ஆனால் அது அல்ல கதை. அதைக் கதையாக எழுதினால் அப்படிக் கொத்தடிமைகளாகப் பெண்களை நடத்தும் மில்களில் புதிய கழிப்பறை திறப்புவிழாவுக்கு வரும் அரசியல்வாதி கேரக்டரில் கலைஞரே தானே நடிக்க வேண்டி வரும்? வெளியே சங்க உரிமை கேட்டு தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருப்பார்கள்.காவல்துறை தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடிக்க டைட் க்ளோஸ் அப்பில் கலைஞரின் வெள்ளைச் செருப்பு காரை விட்டு இறங்கும் காட்சி. அதை கட் பண்ணினால் உள்ளே கலைஞர் ரிப்பன் வெட்டிக்கொண்டிருப்பார்.அப்படி கதையைத் தானே எழுதுவாரா கலைஞர்?இல்லை.அந்தக் கதை அல்ல இது.
ஓகோ அப்படின்னா அந்நிய நாட்டுப் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனியான ஃபாக்ஸ்கான் போன்ற கம்பெனிக்குள்ளே மாட்டிக்கொண்டு எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் ஊதிய ஒப்பந்தமும் இல்லாமல் அல்லாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பற்றிய கதையை அவர் எழுதிவிட்டாரோ என்று ஒரே ஒரு நிமிடம் யோசித்தேன்.இல்லை.அப்படி ஒரு கதை எழுதினால் அதில் வில்லனாக கலைஞர் கருணாநிதி என்பவர்தானே கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வந்து ஆள் துணையுடன் நிற்க வேண்டியிருக்கும். கதாநாயகனாக முத்துக்குமாரோ அல்லது ஒரு ஏ.சௌந்தரராஜனோ அல்லவா வந்து நிற்க வேண்டியிருக்கும்.கையில் மாட்டப்பட்ட விலங்குடன் அவர்கள் போலீஸ் வேன் படியில் நின்றபடி கலைஞருக்கு எதிராகப் பேசும் அடுக்கு மொழி வசனங்களை (அதாவது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அரசின் மீது வைப்பதால் அதற்கு அடுக்கு மொழி என்று பேர்) கதை வசன கர்த்தா என்கிற முறையில் கலைஞரே அல்லவா எழுத வேண்டி வரும்.தன்னை வில்லனாக வைத்து தானே படம் எடுக்கும் அளவுக்கு இன்னும் கலைஞர் நிலைதடுமாறிப் போகவில்லையே என்கிற சந்தேகம் உடனே வந்துவிட்டது. இல்லை.அதைப்பற்றிய கதை அல்ல இது.
அதுசரி. கலைஞர் 15 வயசில் அரசியலுக்கு வந்தவர். படிப்படியாக முன்னேறி இன்று இந்த நிலைக்கு உயர்ந்தவர். அவர் இதுமாதிரி சின்னச் சின்னப் பிரச்னைகளை வைத்தா கதை எழுதுவார்? இதெல்லாம் ஒரு சில ஆயிரம் பேரின் பிரச்னைகள்.கோடிப்பேருக்கு மேல் வேலை இல்லை என்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வைத்துவிட்டு வயிறெரியக் காத்துக்கிடக்கிறார்களே அப்படிப்பட்ட கோடிப்பேரின் கதையைத்தான் கலைஞர் இளைஞன் படத்தில் எழுதியிருப்பார் என்று கூட நம்ம்பினேன்.ஆனால் அங்கேயும் சிக்கல் வந்து விடுகிறது.25 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து வேலையற்ற இளைஞர்களுக்கு என்ன கிழித்தார் என்று ஒரு வசனத்தை அவரே எழுதிவிட வேண்டி வருமே? இளைஞர்களுக்கு தெரியாமல்கூட வேலை கொடுத்துவிடாதீர்கள் வயசாளிகளுக்கு வாய்ப்பை வழங்குங்கள் என்று அரசாணை 170ஐப் பிறப்பித்தவராச்சே.. படத்தில் யாருக்காக .. யாருக்காக.. இந்த ஆணைகள்..
தடை ஆணைகள் .. யாருக்காக.. என்று கதாநாயகன் பாட்டுப்பாட வேண்டி வருமே.. அந்தப் பாடலுக்கு இடையே குத்துப்பாட்டு டான்ஸ் பார்த்துக்கொண்டு வில்லன் சிரிப்புச் சிரித்தபடி கலைஞரையே க்ளோஸப்பில் காட்ட வேண்டி வருமே... எழுதுங்கள் இவன் கல்லறையில் இவன் இரக்கமில்லாதவன் என்று....இல்லை. அந்தக் கதையை படமாக எடுக்கவில்லை கலைஞர்.
ஓ.. அப்படியானால் ஊழலை எதிர்த்து ஒரு இளைஞன் புறப்படுகிறானா கதையில்... ? நல்ல கூத்தாப்போச்சு. ஊழலுக்கு எதிராக கலைஞரே எப்படிக் கதை எழுத முடியும்? ஊழலை பிரம்மாண்டப்படுத்தியவரும் ஜனநாயகப்படுத்தியவரும் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் .சாரி..சாரி.. இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே முதன் முறையாக மக்களையே ஓட்டுக்கு லஞ்சம் வாங்கப்பழக்கிய கேவலத்தைச் செய்த ஒரு கட்சியின் தலைவரல்லவா அவர்.. அவர் எப்படி லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகக் கதை எழுதித் தன் நெஞ்சுக்கு நீதி வழங்க முடியும்? மானாட மயிலாட என்று உள்ளே ஜங்கு ஜங்கு என்று கலைஞர் டிவி படப்பிடிப்பு தளத்தில் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பேரலல் ஷாட்டில் விமானம் தரையிரங்கும் காட்சி அடுத்த ஷாட்டில் அசத்தப் போவது யாரு என்று கேட்டு நிகழ்ச்சியின் ஜட்ஜஸ் பகபகவென்று சிரிக்கிறார்கள்.அடுத்த ஷாட்டில் சிபிஐ அதிகாரிகளின் கார் கலைஞர் டிவி அலுவலகத்தின் கேட்டை இடித்துக்கொண்டு உள்ளே நுழைகிறது... சேச்சே ..இப்படியெல்லாம் ஷாட் வைத்துக் கதை எழுத அவரால் எப்படி முடியும்.. ஆகவே இது ஊழலுக்கு எதிராக இளைஞன் போராடும் கதை அல்ல.
அப்போ இது எதுவுமே இல்லாமல் இளைஞன் என்று ஒரு படமா என்று கோபம் வருகிறது உங்களுக்கு.அப்படியானால் வழக்கமான ஒரு வாலிபனும் யுவதியும் ஓடிஓடிக் காதலிக்கும் படம்தானா இது ? என்று ஆத்திரத்தோடு கேட்கிறீர்கள். அட.. அப்படி இருந்தாலும் பரவாயில்லியே.. அதுவும் இல்லை சாமிகளா..
பின்னே கலைஞரின் இளைஞன் படம் எதைப்பற்றித்தான் பேசுகிறது? நாடாளுமன்றக் கூட்டுக்குழு போட்டாலும் கூடக் கண்டு பிடிக்க முடியாத ஒரு குழப்பம்தான் கலைஞரின் இளைஞன் கதை. எல்லாக் கிராமங்களுக்கும் இப்படத்தைக் கொண்டுபோய்ப் போட வேண்டும்.குறிப்பாக இளைஞர்கள் எல்லோரும் இப்படத்தைப் பார்த்தால் இடைவேளையில் பிரியாணி விருந்தும் பிரியாணி போட்ட இலைக்கு அடியிலே ஆயிரம் ரூபாய் நோட்டும் உண்டு என்று அறிவித்தாவது ஆட்களைத் தள்ளிக் கொண்டு வந்து எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும். விலைவாசிக் கொடுமை ஊழல் கொடுமை எல்லாத்தையும் விட இப்படி ஒரு படம் எடுத்த கொடுமைக்காகவே மக்கள் இத்தேர்தலில் கலைஞரையும் அவரது ஊழல் கூட்டாளிகளையும் தோற்கடிப்பார்கள்.
ஆகவே எல்லோரும் கலைஞரின் இளைஞன் படத்தைப் பாருங்கள். தேர்தல் முடியும்வரை எப்படியாவது அப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே இன்றைய தமிழக இளைஞர்கள் ஆற்ற வேண்டிய அரசியல் கடமை.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக