Home » » ஓசையின்றி கட்டணக் கொள்ளை

    ஓசையின்றி கட்டணக் கொள்ளை

    Written By Sadhikcdm on ஜனவரி 29, 2011 | 3:46 AM

    Hilarious political cartoon images                                         தங்கள் அதிகாரம் என்ன? பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு பணிகளில் தங்களின் பங்களிப்பு என்ன? என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் காட்டும் இடங்களிலெல்லாம் கையெழுத்திடும் நிலையில்தான் இன்று பல பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் இயங்கி வருகின்றன. சுருக்கமாகக் கூறினால் தலையாட்டி பொம்மை போன்றுதான் இந்தக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் கட்டணக் கொள்ளைகள் ஓசையின்றி தினமும் அரங்கேறி வருகின்றன.

     அரசாணை எம்.எஸ். எண்.1310 கல்வி நாள் 18-7-64-ன் படி தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் நிறுவப்பட்டு, 1964-ம் ஆண்டு சங்கங்களின் பதிவுச்சட்டம் 1860-ன் படி பதிவு செய்யப்பட்டு இக்கழகம் ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துவிதப் பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளியின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுவதுடன், பெற்றோர்கள்-ஆசிரியர்கள் ஆகியோரிடையே நட்புறவை வளர்ப்பதற்காகவும் இக்கழகங்கள் தொடங்கப்பட்டன.

     மாணவர்கள்-ஆசிரியர்கள்-நிர்வாகம் ஆகியவற்றுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்து வைத்தல், பள்ளிக்குத் தேவையான கற்பித்தல் துணைக்கருவிகள், தளவாடங்கள், கட்டடங்கள், விளையாட்டுத் திடல் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல், கலை, கைத்தொழில், போதனைத்திறனை ஊக்குவித்தல், கருத்தரங்குகள் நடத்துதல், ஆசிரியர், மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் இதழ்கள் வெளியிடுதல், தொடக்கப்பள்ளிகளில் நர்சரிப் பள்ளிகளைத் தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்று ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான மாணவர் நலன் பயக்கும் செயல்களைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தக்கழகங்கள்.

     ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கழகங்கள், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு ஆண்டுதோறும் சந்தா செலுத்த வேண்டும் என்பது மட்டும்தான் தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழகங்களுக்குத் தலைவர், துணைத் தலைவர், செயலர், பொருளாளர், துணைச் செயலர்கள் என நிர்வாகிகள் உண்டு. ஆனால், பல பள்ளிகளில் யார் தலைவர், யார் துணைச் செயலர், யார் பொருளாளர் என்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் உள்ளது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், தலைமையாசிரியருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகி வருகிறது.

     இந்தக் கழகத்தில் பொதுக்குழு, நிர்வாகக் குழு மற்றும் குறிப்பிட்ட செயல்களுக்காக அமைக்கப்பட்ட குழு என மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் நிர்வாகக் குழுவில் அனைத்துப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பிறர் உறுப்பினராக இருக்கலாம். இப் பொதுக்குழு ஆறு மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது கட்டாயம். பள்ளி தொடர்பான தீர்மானங்களை இவர்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஆதரித்தால்தான் அதை நிறைவேற்ற முடியும். ஆனால், பல பள்ளிகளில் இந்த மாதிரியான குழுக்கள் சிருஷ்டிக்கப்பட்ட குழுக்களாகவே உள்ளன என்பது வேதனை. இதுவும் முறையாகக் கூட்டப்படவில்லை என்றும், கூட்டப்பட்டதாகப் பள்ளிகளே பொய்யாகப் பதிவு செய்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

     அடுத்து பொதுக்குழுவால், நிர்வாககுழுவினர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இது பல பள்ளிகளில் பின்பற்றப்படுவதில்லை. பள்ளிக்கு நெருக்கமானவர்களாக உள்ளவர்களையே தலைவர், துணைச் செயலர்கள், பொருளாளர் (தலைமையாசிரியரே செயலர்) உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தி, வெறும் கையெழுத்துக்காக மட்டுமே இவர்களைச் சந்திக்கும் நிலைதான் பெரும்பாலான பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களிடமும் வசூலிக்கப்படும், பெற்றோர்-ஆசிரியர் கழகச் சந்தா தொகை தவிர, மற்ற விவரங்கள் எதுவும் தெரியாத நிலைதான் உள்ளது.

     பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு ஆண்டுதோறும் வரவு-செலவுத் திட்டத்தைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கவும், தணிக்கை அறிக்கையைப் பரிசீலனை செய்யவும் அதிகாரம் பெற்றவை. ஆனால், எந்தப் பள்ளியிலும் இம்முறை பின்பற்றப்படவில்லை என்பது வேதனை.

     இவையனைத்துமே ஒன்று அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கவனிப்பார் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயலர்கள் கவனிப்பார்கள். எந்தப் பெற்றோருக்குமே இந்த விவரங்கள் தெரிந்துவிடக் கூடாது என்பது போலத்தான் பள்ளி நிர்வாகங்கள் இன்றளவும் செயல்பட்டு வருகின்றன.

     பெற்றோர்-ஆசிரியர் கழகங்களின் இத்தகைய செயல்படாத போக்குகளால் பள்ளிகளில் கட்டணக் கொள்ளைகள் பலவிதங்களில் தலைவிரித்தாடுகின்றன. நன்கொடை என்ற பெயரிலும், நோட்டுப் புத்தகங்கள் வாங்க, சீருடை வாங்க எனப் பல வகையிலும், பல வழிகளிலும் மாணவர்களின், அவர்களின் பெற்றோர்களின் பணம் சுரண்டப்பட்டு வருகிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள், ஒவ்வொரு பள்ளியிலும் சரியாகச் செயல்படுமாயின் இக்கழகங்களின் தீர்மானமின்றி எத்தொகையையும் வசூலிக்க முடியாது என்பதுதான் உண்மை.

     எனவே, பள்ளிகளில் கட்டணக் கொள்ளை அதிகரித்துவிட்டது என வெளியே இருந்து கூச்சலிடுவதைத் தவிர்த்து, தாங்களும் அப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர்தான் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைத் திறம்படச் செயல்படுத்தினால் பள்ளியும் உயரும். தேவையற்ற கட்டணக் கொள்ளையும் தவிர்க்கப்படும். இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும், பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைகளைத் தடுக்க எத்தனையோ வழிகளைப் பின்பற்றும் அரசு, பள்ளிகளில் முறையாகப் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ணம்
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .